Saturday, September 10, 2011

காணாமலே போகட்டும் இந்தச் சேனல்கள்...

தமிழகத்தில் இப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்படுவது அரசு கேபிள் தொலைக்காட்சி பற்றித்தான். நாட்டில் எண்ணற்ற பிரச்னைகள் இருந்தாலும், அவற்றை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு, மாலை ஆறு மணி ஆனதும் இல்லத்தரசிகள், இளைஞர்கள், ஆண்களும்கூட தாங்கள் விரும்பும் தொலைக்காட்சி சீரியல்களைப் பார்க்காவிட்டால் அன்று இரவு தூங்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

செப்டம்பர் 1-ம் தேதி முதல் அரசு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டு, பல பகுதிகளில் சிறப்பாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. இது மகிழ்ச்சி தரும் செய்திதான்.

ஆனால், இந்தக் கேபிள் ஒளிபரப்பு தொடங்கியதும், பெண்கள் பட்டபாடு இவ்வளவுதான் என்று சொல்லி மாளாது. ஏனென்றால், "எங்க டி.வி.யில் இந்தத் தனியார் சேனல் தெரியவில்லை, அந்தச் சேனல் தெரியவில்லை' என்று மளிகைக் கடைகளிலும், வீதிகளிலும், குடிநீர் பிடிக்கும்போதும் மாறிமாறி நலம் விசாரிப்பதுபோல, டி.வி. சேனல்களைப் பற்றி விசாரிக்கத் தொடங்கிவிட்டனர்.

இது மட்டுமல்ல, "அய்யோ, இந்த சீரியலில் அந்தக் காட்சிக்கு பின் என்ன ஆகுமோ. அந்தச் சேனலில் அவருக்கும் அவளுக்கும் விவாகரத்து நடக்குமோ, நடக்காதோ, திருமணம் நடக்குமோ, நடக்காதோ' என்று தனது குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டுவார்களோ, அதைவிட அதிகம் என்றுதான் கூற வேண்டும்.

இது மட்டுமல்ல, பிற மாவட்டத்தில் இருக்கும் தங்களது தோழிகளிடமும், உறவினர்களிடமும் செல்போனில் தொடர்புகொண்டு, "எங்கள் பகுதியில் இந்தச் சேனல்கள் தெரிவதில்லை, உங்கள் பகுதியில் அனைத்துச் சேனல்களும் தெரிகிறதா?' என்று கேட்பதும், அப்படி சேனல்கள் ஒளிபரப்பு ஆகிறது என்றால், அந்தச் சேனல்களில் வரும் சீரியலைப் பற்றி விசாரிப்பதையும் தவிர்க்கவில்லை.

அட, இந்தப் பிரபல சேனல் தெரியவில்லையே. இனி என்ன செய்வது? மேலும், இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக, சீசன் 1, சீசன் 2, சீசன் 3 என்ற சேனல்களின் குரலை இனி கேட்க முடியாதே.

எவ்வளவோ கஷ்டப்பட்டு தயாரிப்பாளர்களிடம் வாய்ப்புப் பெற்று, கஞ்சியும் கூழும் குடித்து, மழையிலும் வெயிலிலும் அலைந்து எடுக்கப்பட்ட படங்களைக் குறைந்த விலைக்கு வாங்கியும், தர மறுப்பவர்களை மிரட்டியும் திருவிழா நாள்களில் புதுத் திரைப்படங்களை ஒளிபரப்பி நம்மைச் சந்தோஷப்படுத்திய சேனல்கள் இனி வருமோ? வராதோ? என்று புலம்பித் தள்ளுகின்றனர் பெண்கள், இளைஞர்கள்.

ஏன் இந்த மனக்குமுறல்? அப்படி என்ன கிடைக்கப் போகிறது இந்தச் சேனல்களால் என்ற கேள்விகளை இவர்களைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை அளிக்கும் வகையில், அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை சிறப்பானது, பாராட்டுக்குரியது.

குறிப்பிட்ட தனியார் சேனல்களைத் தடை செய்வதால் நம் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படுவது உறுதி. அதில் முதலாவது, கல்வித் தரம்.

இன்றைய சூழலில் பள்ளி, கல்லூரிக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பும் மாணவர்களில் பலர் மாலையில் ஆறு மணிக்கு மேல் தொலைக்காட்சி சீரியல்களையும், பிற நிகழ்ச்சிகளையும் பார்த்து நேரத்தை வீணாக்குகின்றனர்.

தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, படித்த பெற்றோர்கூட முறையாகக் கவனிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. சீரியல் தொடங்குவதற்கு முன் குழந்தைகளின் வீட்டுப் பாடங்களை முடிக்க வேண்டும் என்று அவசர அவசரமாகக் குழந்தைகளை மிரட்டி, உருட்டி கற்றுக் கொடுக்கும் பெற்றோரையும் பார்க்க முடிகிறது. எனவே, இப்போது தடை செய்யப்பட்டிருக்கும் சேனல்களை நிரந்தரமாகத் தடை செய்தால் நம்நாட்டில் தேர்ச்சி விகிதம் கண்டிப்பாக உயரும், குழந்தைகளுக்கு நிரந்தர அன்பும் கிடைக்கும் என்பது உறுதி.

இரண்டாவதாக, செய்தித்தாள் மற்றும் புத்தகம் வாசிப்போர் அதிகரிப்பர். கேபிள் தொலைக்காட்சிகள் வளர்ச்சி அடைந்த பின்னர் மக்களிடம் புத்தக வாசிப்பு குறைந்துவிட்டது. ஏன் செய்தித்தாள்களைக்கூட படிக்க முன்வருவதில்லை. எனவே, மக்களை நல்வழிப்படுத்தும் வகையில் இனி புத்தகங்களை வாசிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

அடுத்ததாக, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தைவிட சீரியல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பெண்கள் அதிகம் இருப்பதால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதுடன், மனஅழுத்தம் காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவோர் அதிகம்.

மேலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ஒன்றுகூட நல்வழிப் படுத்துபவையாக இல்லை. கணவன்- மனைவி உறவு, மாமனார் மாமியார் மற்றும் உறவினர்களுடன் நல்ல அணுகுமுறையும் இந்த சீரியல்களால் மாறி வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் கணவன் அலுவலகத்தில் இருந்து இரவு ஏழு அல்லது எட்டு மணிக்கு வந்தால், அவரிடம் முகம்கொடுத்துப் பேசாமலும், டீ, காபி கூட போட்டுத் தராத மனைவியர் இருக்கிறார்கள். இரவு நேரத்தில் வீட்டுக்கு உறவினர்கள் வருவதையே விரும்பாத பெண்களும் இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் மாற்ற இந்த நடவடிக்கை தேவை.

எனவே, குடும்பம் ஒரு கோவில் என்று கூறுவதுபோல குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழவும், இன்றைய இளைய தலைமுறைக்கு நல்வழி காட்டும் வகையிலும், தமிழக மக்களை ஆட்டிப்படைத்த சில சேனல்கள் இல்லாமல் இருந்தாலே குடும்பத்தில் சந்தோஷம் பெருகும், நல்லது நடக்கும்.

நன்றி தினமணி

Monday, January 3, 2011

ராக்கெட் தோல்விக்கு யார் காரணம்?

செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் பாதை மாறியதால், அது மண்ணில் விழுந்து யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக வானிலேயே வெடித்துச் சிதறும்படிச் செய்தனர் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆண்டு இரண்டாவது முறையாக ஜிஎஸ்எல்வி ராக்கெட் அனுப்புவதில் தோல்வியடைந்திருக்கிறோம்.

1979-ம் ஆண்டு முதலாக 7 முறை செயற்கைக் கோளுடன் ராக்கெட் ஏவப்பட்டு, நான்கு முறை தோல்வி அடைந்திருக்கிறோம். இத்தகைய தோல்விகள் வளர்ந்த நாடுகளிலும் ஏற்படுவது உண்டு. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இது பெரிய இழப்பு. தற்போது விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டின் மதிப்பு ரூ. 125 கோடி. சென்ற ஏப்ரல் மாதம், பாதை தவறி கடலில் விழுந்த ராக்கெட்டின் மதிப்பு ரூ. 150 கோடி.

இதற்காக நம்பிக்கை இழந்து செயற்கைக்கோள்களை அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதல்ல அர்த்தம். இத்தகைய முயற்சிகளை நாம் நிறுத்த முடியாது, நிறுத்தவும் கூடாது. இத்தகைய அறிவியல் சாதனைகள்தான் நம்மை உலக அரங்கில் தலைநிமிர வைக்கும். பொருளாதார வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் இத்தகைய அறிவியல் வளர்ச்சிதான் ஒரு வளரும் நாட்டுக்கு முக்கிய அடையாளம் என்பதை மறுக்க முடியாது.

ஏன் மீண்டும் மீண்டும் இத்தகைய தோல்வியை இந்தியா சந்திக்க நேர்கிறது என்பதை மிகத் துல்லியமாக, நுட்பமாக ஆய்வு செய்து கண்டறிய வேண்டியது மிகமிக அவசியம். இதற்காக இரண்டொரு நாளில் ஒரு குழுவை அமைத்து, ஆய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். கடந்த ஏப்ரல் 15-ம் தேதி ராக்கெட் விண்ணுக்குச் செலுத்தியபோதும் இத்தகைய குழு அமைக்கப்பட்டு அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டன. இருப்பினும்கூட இப்போது புதிதாக ஒரு தவறு ஏற்பட்டு, அதன் காரணமாக ஜிஎஸ்எல்வி ராக்கெட் செலுத்த முடியாமல் போயுள்ளது.

கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் நாம் தேவையான முன்னேற்றம் காணவில்லை என்பது வெளிப்படை. தற்போது நாம் விண்ணில் செலுத்திக்கொண்டிருக்கும் ராக்கெட்டுகளில் ரஷியாவிடம் பெற்ற கிரையோஜெனிக் இன்ஜின்கள் தான் பொருத்தப்பட்டிருந்தன. புவியீர்ப்பு விசையை மீறி, சுமார் 2000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏந்திச்செல்ல வேண்டுமானால், மண்ணிலிருந்து புறப்படும் வேகம் மிகமிக அதிகமாகவும், வீரியமாகவும் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற தொழில்நுட்பமாக கிரையோஜெனிக் இன்ஜின் அமைந்துள்ளது. இந்த முறையும் கிரையோஜெனிக் இன்ஜினை முடுக்கிவிடுவதில் ஏற்பட்ட கோளாறுதான் ராக்கெட் தோல்வியடைந்ததற்கு அடிப்படைக் காரணம் என்று கூறப்படுகிறது. சரியாக எந்த இடத்தில் தவறு நடந்துள்ளது என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை.

தற்போது ஜிஎஸ்எல்வி ராக்கெட் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிந்தாலும்கூட, முக்கியமான மூன்று விஷயங்களில் இந்தியாவுக்கு காலத்தால் பின்னடைவு நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் கருத்தில்கொண்டு, இந்த பிரச்னையை அணுக வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது.

முதலாவதாக, ஆராய்ச்சியாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பொறியியல் மாணவர்கள் எல்லோரையும் சம்பாதிக்கும் இயந்திரங்களாகத்தான் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் மாற்றுகின்றன. நல்ல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் கல்வியை அளிப்பது இல்லை. இதையும் மீறி நல்ல ஆராய்ச்சியாளர்கள் உருவானால் அவர்களை ஊக்கப்படுத்தவும் ஆளில்லை.

கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் எங்கள் மாணவர் ஆண்டுக்கு இத்தனை லட்சம் ரூபாய் சம்பளத்துக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று விளம்பரம் செய்யும் அவலம்தான் கடந்த பத்து ஆண்டுகளில் உருவெடுத்திருக்கிறது. எங்கள் மாணவர் இஸ்ரோவில் சேர்ந்திருக்கிறார் என்றோ, டிஆர்டிஓ-வில் ஆராய்ச்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்றோ, கல்லூரி விரிவுரையாளராகச் சேர்ந்திருக்கிறார் என்றோ சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வதில்லை. கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் மட்டுமல்ல, அரசும் அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சிக்கு முன்னுரிமை கொடுப்பதை நிறுத்திவிட்டது.

இரண்டாவதாக, ஆராய்ச்சியாளர்களைவிட அரசியல்வாதிகள் முக்கியத்துவம் பெறுவது எல்லா நிலைகளிலும் ஏற்பட்டுவிட்டது. ஆராய்ச்சியாளர் நியமனங்களில்கூட, அமைச்சருக்கும் ஆட்சியாளர்களுக்கும் வேண்டியவர், தகுதியில் சற்று பின்தங்கியிருந்தாலும்கூட தேர்ந்தெடுக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்படும் இவர்கள்தான் சில ஆண்டுகளில் பதவி உயர்வு பெற்று, பொறுப்பான பதவிகளில் அமர்கிறார்கள். அப்போது இவர்களது திறமைக்குறைவு எல்லாவற்றின் மீதும் படிகிறது.

மூன்றாவதாக, ராக்கெட்டுகளை விண்ணில் ஏவும் இஸ்ரோ என்றாலும், புதிய பீரங்கிகளை உருவாக்கும் ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமானாலும் (டிஆர்டிஓ) தங்களுக்குத் தேவையான மிகச் சிறு கருவிகளையும் வெளியில் உள்ள பல்வேறு நிறுவனங்களிடம் அயல்பணி ஒப்பந்தம் மூலமாகவே பெறுகின்றன. இத்தகைய அயல்பணி ஒப்பந்தங்களில் ஈடுபடுத்தப்படும் ஒரு தொழிற்கூடம், தரத்தில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளாத நேர்மையான தொழிற்கூடமாக இருந்தால் மட்டுமே, ஒட்டுமொத்த ஆராய்ச்சியும் பயனுறும். இதில் ஒரு சிறிய பாகத்தை தரக்குறைவான தொழிற்கூடத்திடம், அரசியல் நிர்பந்தம் அல்லது மேலதிகாரியாக இருக்கும் ஆராய்ச்சியாளரின் நிர்பந்தம் காரணமாக ஒப்பந்தம் கொடுத்து, செய்து வாங்கினால், இத்தகைய தோல்விகள் ஏற்படவே செய்யும்.

லாடம் சரியில்லாவிட்டால் குதிரை சரியாக ஓடாது. குதிரை சரியாக ஓடாவிட்டால் அதன் மீது அமர்ந்துள்ள ராணுவ வீரன் சரியாக சண்டையிட முடியாது. வீரன் சண்டையிட முடியாவிட்டால், போரில் தோல்வி தவிர்க்க முடியாதது. தரத்துக்கும் அறிவுக்கும் முன்னுரிமை தரப்படாவிட்டால் இதுபோன்ற தோல்விகளைத் தவிர்க்க இயலாது.

நன்றி தினமணி