Thursday, October 21, 2010

வெள்ளிவிழா வாழ்த்துகள்!(தூத்துக்குடி)

ஓன்றுபட்ட நெல்லை மாவட்டத்திலிருந்து பிரிந்து தூத்துக்குடி தனி மாவட்டமாகி, 20.10.2010 அன்று வெள்ளி விழா கொண்டாடுகிறது. இம்மாவட்டத்தில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் இருந்து, ஆறு ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, கோவில்பட்டி நகராட்சி, பன்னிரெண்டு ஒன்றியங்கள் உள்ள இந்த மாவட்டம் இடைக்காலத்தில் சிதம்பரனார் மாவட்டம் என்றும் அழைக்கப்பட்டது. வீரம் செறிந்த இந்த மாவட்டம் மானாவாரி கரிசல் மண், தாமிரபரணி பாயும் தீரவாசம், தேரிக்காடுகள், கடற்கரைப் பகுதி என பல புவியியல் அமைப்புகளைக் கொண்டது. பொதிகை, தாமிரபரணியின் நதி மூலம் ஆகி, இம்மாவட்டத்தின் உள்ள புன்னக்காயல் கடலில் கலக்கிறது. இங்கு கட்டபொம்மன், தீரன் சுந்தரலிங்கம், ஊமைத்துரை, வெள்ளையத் தேவன், முண்டாசுக்கவி பாரதி, வ.உ.சி., உமறுப்புலவர் போன்ற ஆளுமைகள் உலவினர். காட்டிக் கொடுத்தவர் என்ற ஏளனப் பேச்சுக்கு ஆளாகிவிட்டவர் என்றாலும், எட்டயபுரம் ராஜா குடும்பத்தினர் தமிழுக்கும், தமிழிசைக்கும் தொண்டாற்றியதை மறக்க முடியாது. விடுதலைப் போராட்டக் காலத்தில் காந்தியத் தாக்கத்தால் ஆங்கிலேய அரசை எதிர்த்து உப்பளத் தொழிலாளர்கள் குலசேகரப் பட்டினத்திலிருந்து உடன்குடி வரை உள்ள தந்திக் கம்பங்களை வெட்டி அழித்து, ஆங்கில உப்பள கண்காணிப்பாளர் லோனை வெட்டிச் சாகடித்தனர். லோன் கொலை வழக்கு எனப்பட்ட அவ்வழக்கில் பல தியாகிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். பூச்சிக்காடு கள்ளுக்கடை, மாவடி பண்ணை வழக்குகளிலும் ஆங்கிலேயர்களால் பலர் கடும் தண்டனைக்கு உள்ளானார்கள். இம்மாவட்டம் விடுதலை வேள்வியில் ஆர்த்து எழுந்தது. புனித சவேரியர், வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் போன்ற வெளிநாட்டைச் சார்ந்தவர்கள் இம்மண்ணில் அருந்தொண்டுகள் செய்தனர். உமறுப் புலவர், சீதக்காதி, சதக்கதுல்லா அப்பா, காசிம் புலவர் போன்றோர் இஸ்லாமிய மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர்களாக விளங்கினர். திருவைகுண்டத்தில் பிறந்த குமரகுருபரர், ஆழ்வார் திருநகரில் வாழ்ந்த நம்மாழ்வார் போன்றோர்களுடைய தமிழ்ப்பணி மறக்க முடியாது. குமரகுருபரர் காசிக்குச் சென்றபொழுது ஒளரங்கசீப் இவரைப் பாராட்டி தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபொழுது, குமரகுருபரர் காசியில் இந்துக்களுக்கு மடம் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். ஒளரங்கசீப் அதனை ஏற்று மடம் அமைத்துக் கொடுத்தார். அம்மடத்துக்கு இந்துக்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களும் வரவேண்டும் என குமரகுருபரர் சொல்லியது வரலாற்றுச் செய்தியாகும். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பல நாடுகளுடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்த கொற்கை துறைமுகம், சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தர்களின் ஆட்சிகளில் பல்வேறு காலகட்டங்களில் இருந்துள்ளது. கொற்கை முத்தை உலக அழகி கிளியோபாட்ரா அணிந்திருந்தார் என்று கூறப்படுகிறது. சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் கொற்கைத் முத்தைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. கொற்கையிலிருந்து மிளகு, ஏலம், கிராம்பு போன்ற பல பொருள்களை யவனர்கள் கொண்டு சென்றனர். இங்கு அராபிய, சீன, ரோம நாட்டு காசுகளும், கோப்பைகள், பீங்கான்கள், மதுபாட்டில்கள் போன்றவை கிடைத்துள்ளதாக அகழ்வாராய்ச்சி அறிஞர் சாத்தான்குளம் அ.ராகவன் கூறுகிறார். கொற்கையை ஆரவாரமிக்கது என்று அகநானூறு குறிப்பிடுகிறது. இக்கடற்கரையின் அழகை ஐங்குறுநூறு பாடுகிறது. சிலம்பில் சொல்லப்பட்ட கொற்கைப் பரல்கள் ஆங்கிலத்தில் பியர்ல்ஸ் என்று அழைக்கப்பட்டது. இன்றைக்கும் இந்த முத்துக்கள் ரஷ்ய காட்சி சாலையில் இடம்பெற்றுள்ளன. பிளினி இங்கு நடைபெறும் வியாபாரத்தைப் பற்றி விரிவாகச் சொல்கிறார். பழைய காயலும் கொற்கைக்குப் பின் பிரசித்தி பெற்றது. பின்னர் தூத்துக்குடி துறைமுக நகரமாக மாறியது. 16-ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களுக்கும், போர்த்துகீசியர்களுக்கும் வியாபாரப் போட்டி நடந்தது. டச்சுக்காரர்களின் கண்களில் தூத்துக்குடி பட்டதும் அதைக் கைப்பற்றினர். பிற்காலத்தில் வணிக கேந்திரமாகப் பல்வேறு மேலை நாட்டினருக்கு விளங்கியது. தூத்துக்குடி என்றால், மணல் தூற்றி நிரவப்பட்டது என்பது பொருள். பருத்தி மார்க்கெட் தூத்துக்குடியில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்ததால் கோரல் மில் போன்ற நெசவாலைகளும் இங்கு அமைந்தன. கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரத்திலிருந்து மாட்டு வண்டிகளில் பருத்திகள் தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அதற்காக இன்றைக்கும் இருக்கிற கிரேட் காட்டன் ரோடு 1940-ல் அமைக்கப்பட்டதாக எச்.ஆர். பேட் ஐ.சி.எஸ். குறிப்பிடுகிறார். வ.உ.சிதம்பரனாரின் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி, தூத்துக்குடி பீச் ரோடு 4-ம் எண் கட்டடத்தில் இயங்க ஆரம்பித்தது. வெள்ளையரை எதிர்த்து விடுதலை உணர்வை வளர்ப்பதற்கு, வ.உ.சி., கிழக்கு அலை கடலின் நடுவில் கப்பலைச் செலுத்தினார். அச்சமயம் ஆங்கிலேயர் தூங்குவதற்கு அஞ்சி, நடுக்கடலில் படகில் தூங்கினர். 1908 மார்ச் 13-ம் நாள் தூத்துக்குடியில் கிளர்ந்தெழுந்த போராட்டம் ஆங்கிலேயர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. இதனால் தேவையற்ற வகையில் ஆங்கிலேயர்கள் விடுதலை வீரர்களைக் கைது செய்து பல கலகங்கள் உருவாகின. அதில் திருநெல்வேலி கலகம் குறிப்பிடத்தக்கது. விபின் சந்திர பாலரின் கைதைத் தொடர்ந்து கிளர்ந்தெழுந்த இந்த நெல்லை கலவரத்தில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா போன்றவர்கள் கைது செய்யப்பட்டு கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க நேர்ந்த சரித்திரம் தமிழகத்தின் நினைவுகளிலிருந்து அழிக்க முடியாத வரலாற்றுச் சுவடுகள். அண்ணல் காந்தி தூத்துக்குடிக்கு இருமுறை வந்தார். ஒருமுறை சிதம்பரனார் சிறையிலிருந்தபொழுது அவரைப் பற்றி கூட்டத்தில் காந்தி பேசினார். 1927-ல் இரண்டாம் முறையாக தூத்துக்குடிக்கு வந்த காந்தி, தியாகி விஸ்வநாததாஸின் தேசியப் பாடலைக் கேட்டு கைதட்டி ரசித்தார். அந்த நிகழ்ச்சியில் தான் தமிழ் கற்க பலமுறை முயற்சி செய்ததாகவும், தமிழினுடைய தொன்மையும், சிறப்பையும் அறிந்து பிரமித்துள்ளதாகவும், திருக்குறளில் சொல்லப்பட்ட அபூர்வ கருத்துகள் தன் கவனத்தை ஈர்த்தது என்றும் கூறினார். தமிழையும், திருக்குறள் மூலத்தையும் படிக்க வேண்டும் என்ற குறிக்கோள் என் மனதில் உள்ளது. இதனைக் கற்க ஆண்டவன் வாய்ப்பு அளிக்கவில்லை என்ற வருத்தமும் எனக்கு இருக்கிறது என்று தூத்துக்குடியில் பேசினார். கல்கி அமைத்த எட்டயபுரம் பாரதி மண்டபம், வெள்ளை மாளிகை போன்று இன்று கம்பீரமாக எழுந்து நிற்கிறது. அகில இந்திய அளவில் மட்டுமல்லாமல், இலங்கை, மலேசியா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட நன்கொடையிலிருந்து, தன்னுடைய தலையாய பணியாக பாரதி மண்டபத்தை அமைத்தார் கல்கி. அந்நிகழ்ச்சியைப் பற்றி கல்கி குறிப்பிடும்பொழுது- ""எட்டயபுரம் கரிசல் மண். மழை பெய்தால் சேறாகி விடும். அன்றைய மராமத்து அமைச்சர் பக்தவத்சலம் உதவியால் சாலைகள் சீரமமைக்கப்பட்டன. திருநெல்வேலி ஜில்லா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஸ்ரீ ஏ.பி.சி.வீரபாகு, வீரத்தியாகி ஸ்ரீ சோமயாஜுலு, காரைக்குடி கம்பன் கழகத் தலைவர் சா.கணேசன் ஆகியோர் பாரதி மண்டப திறப்பு விழாவுக்கு எனக்கு ஒத்தாசையாக இருந்தனர். மேற்கு வங்க கவர்னர் ராஜாஜி, சென்னை மாகாண பிரதமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோர் பாரதி ஸ்பெஷல் ரயில் மூலம் சென்னையிலிருந்து கோவில்பட்டி வந்து சேர்ந்தனர். திறப்பு விழாவன்று எட்டயபுரம் தடபுடலாக தயாரானது. கமுகு, கூந்தல் பனைகள், மலர் சரங்களை சா.கணேசனே பொறுப்பேற்று இரண்டு நாள்களும் அலங்கரித்தார். விழா தொடக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய பின், அடிக்கல் நாட்டிய ராஜாஜியே மண்டபத்தைத் திறந்து வைத்தார். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், சபாநாயகர் சிவசண்முகம் பிள்ளை, உணவு அமைச்சர் டி.எஸ்.எஸ்.ராசன், அமைச்சர் டானியல் தாமஸ், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜீவானந்தம், நாமக்கல் கவிஞர், ம.பொ.சிவஞானம், எல்.கிருஷ்ணசாமி பாரதி, மவுலானா சாகிப் என பல்வேறு கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், திரைப்படத் துறையினர் பங்கேற்றனர். சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவர் காமராசருக்கும், ராஜாஜிக்கும் மிகுந்த பிணக்கு இருந்தவேளையில், காமராசர் மேடையில் பேசிவிட்டு, பார்வையாளர் வரிசைக்குச் சென்று அமர்ந்து விட்டார். அடியேன் காமராஜரை மேடைக்கு அழைத்து வந்து, ராஜாஜியின் பக்கத்தில் அமரச் செய்தபொழுது, திரண்ட கூட்டத்திலிருந்து கரவொலி பலமாகக் கேட்டது. சுமார் 50,000 முதல் ஒரு லட்சம் பேர்கள் வரை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக, தினமணியும், ஹிந்துவும் பக்கம்பக்கமாகச் செய்திகள் வெளியிட்டன! கயத்தாறில் தூக்கிலிடப்பட்ட கட்டபொம்மனுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை அமைத்தார். திறப்பு விழாவுக்கு நீலம் சஞ்சீவரெட்டி வருகை தந்தபொழுது கிராமங்களிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டதும், அதுபோலவே கோவில்பட்டியில் காருகுறிச்சி அருணாசலத்துக்கு ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோரின் கூட்டு முயற்சியில் சிலை அமைத்து, அவர்கள் நடத்திய விழாவுக்கு தூத்துக்குடி, கோவில்பட்டி மக்கள் திரண்டது எல்லாம் கடந்த கால செய்திகள். இசைக்கு அடித்தளம் அமைத்த நல்லப்ப நாயக்கர் என்ற விளாத்திகுளம் சாமிகள் பற்றி தமிழ்நாடு அறிய வேண்டும். காடல்குடி ஜமீன்தார் பரம்பரையில் வந்தாலும் கூரை வீட்டில் ஒரு துறவிபோல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, திருவெண்காடு சுப்பிரமணியம், காருகுறிச்சி அருணாசலம் போன்றவர்கள் தங்கள் குருவாக ஏற்று விளாத்திகுளம் சாமிகளை போற்றினர். பெருங்குளத்தில் பிறந்த மாதவய்யா, பெ.நா.அப்புசாமி, விட்டலாபுரத்தில் பிறந்த பி.ஸ்ரீ. ஆச்சார்யா, எட்டயபுரத்தில் பிறந்த இ.மு.சுப்பிரமணிய பிள்ளை, ஒட்டநத்தத்தை சேர்ந்த பண்டிதமணி ஜெகவீரபாண்டியனார், மதுரகவி பாஸ்கரதாஸ், குருமலை சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் அ. சீனிவாச ராகவன், சாத்தான்குளம் ராகவன், உரையாசிரியர் வை.மு. கோபால கிருஷ்ணம் ஆச்சாரியார் என இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நீண்ட அறிஞர்களை வரிசைப்படுத்தலாம். இடைச்செவல் என்ற ஒரு சிறிய குக்கிராமத்தில் பிறந்த கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் போன்றோர் சாகித்ய அகாடமி விருது பெற்றது முக்கிய செய்தியாகும். திரை உலகில் மறைந்த நடிகர் சந்திரபாபு, திருவைகுண்டத்தில் பிறந்த எஸ்.டி.சுப்புலட்சுமி, டி.எஸ்.பாலையா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். திருச்செந்தூர் மற்றும் திருவைகுண்டம் உள்ளடக்கிய நவத்திருப்பதிகள், கழுகுமலை, கிறித்துவர்கள் வணங்கும் மணப்பாடு, தூத்துக்குடியில் உள்ள மாதா கோவில் என்ற திருத்தலங்களும் உண்டு. இம்மாவட்டத்தில் கிறித்துவ, இந்து, இஸ்லாம் மக்கள் சகோதர பாசத்தோடு பழகுவது ஒரு வாடியாக்கையான நிகழ்வாகும். திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, புன்னைக்காயல் வரை பச்சைப் பசேலென்று வாழை, நெல்வயல்கள் உள்ளன. பெருங்குளத்தில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து சேர்கின்றன. இப்படி பல சிறப்புகள் இந்த மாவட்டத்தைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இந்தியாவில் உள்ள பத்து துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி துறைமுகம் உப்பு, மீன்பிடி தொழில் என்ற நிலை மாறி, மின்சாரம் தயாரிக்கும் நகரமாகிவிட்டது. நான்கு லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்நகரத்துக்கு ஸ்பிக் தொழிற்சாலை, தேங்காய் எண்ணெய், பெயிண்ட் உற்பத்தி ஆலைகள் இருந்தன. ஆனால் இன்று ஸ்டெர்லைட் தாமிர தொழிற்சாலை, கடல் உணவு ஏற்றுமதி தொழிற்சாலைகள் என பல நிறுவனங்கள் இந்நகரத்தில் பெருகிக் கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்ற கருத்து பலமாக உள்ளது. மராட்டியத்தில் இரத்தினகிரியில் அல்போன்ஸô மாம்பழ உற்பத்தி பாதிக்கப்படும் என்பதற்காக அங்கிருந்து விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் குடிபுகுந்தது. இப்பிரச்னை உச்ச நீதிமன்றத்திலும் உள்ளது. இங்குள்ள கடலின் ஆழத்தை பதினாறு அடியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. கிழக்குக் கடற்கரை சாலை அமைந்ததால் தூத்துக்குடி எதிர்காலத்தில் வளர வாய்ப்புள்ளது. காரைக்குடியிலிருந்து தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி வரை ரயில் போக்குவரத்து பரிசீலனையில் உள்ளது. சிப்காட் வளாகம், உணவுப் பூங்கா போன்ற திட்டங்கள் தற்போது வந்துள்ளன. இங்கு இருந்த 20 சதவீத நிலக்கரி இறக்குமதி காரைக்கால் துறைமுகத்துக்கு மாற்றப்பட்டது வருத்தத்தைத் தந்துள்ளது. தூத்துக்குடியைச் சுற்றியுள்ள 23 தீவுகளை சுற்றுலாத் தலங்களாக மாற்றும் திட்டங்கள் உள்ளன. தூத்துக்குடி பகுதியை ஒட்டி 8,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. சாத்தான்குளம், திருச்செந்தூர் ஒட்டிய பகுதிகளில் பாயும் தாமிரபரணி உபரி நதிகளை இணைத்து தேரிக்காட்டிற்கு வரக்கூடிய நதிநீர் இணைப்புத் திட்டமும் தொடங்கப்பட்டு, அத்திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இம்மாவட்டத்தில் வடக்கே உள்ள கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் பகுதிகள் மானாவாரி கரிசல் பூமி இங்கு அடிக்கடி விவசாயம் பொய்த்து வருகிறது. இப்பத்தியாளர் சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தொடர்ந்த வழக்கின் காரணமாக அச்சன்கோவில் பம்பை இம்மண்ணில் வைப்பாற்றில் இணைக்கும் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது. ஆனால், கேரள அரசு, வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரை வழங்க மறுக்கிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இம்மண்ணில் விவசாயம் செழித்து வளரும். தூத்துக்குடி நகரம் இந்தியாவுக்கே உப்பிட்டது. ஆனால் இன்று இங்கு குஜராத்திலிருந்து உப்பு வருகிற நிலைமை உள்ளது. பழமையான உப்புத் தொழிலை நம்பி 60,000 பேர் வாழ்கின்றனர். வணிக தொழில் நகரமான கோவில்பட்டியில் நெசவாலைகள், நீண்டகாலமாக இருக்கும் லட்சுமி மில்ஸ், லாயல் மில்ஸ் பல குடும்பங்களுக்கு தீபம் ஏற்றி வந்தது. ஆனால், இன்றைக்கு அந்த ஆலைகளும் சிறப்பாக இயங்கவில்லை. இங்கு தீப்பெட்டித் தொழிற்சாலைகளே ஏழைகளுக்கு வேலை வாய்ப்பைத் தருகிறது. இம்மாவட்டம் பிரிந்து 25 ஆண்டுகளில் ஏற்றத்தையும், இறக்கத்தையும் கண்டு இருந்தாலும் தமிழகப் பொருளாதார வளர்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் முக்கிய அங்கம் வகிக்கிறது. சேதுக் கால்வாய் திட்டத்துக்கு ஏற்பட்டுள்ள தடங்கல்களால் தூத்துக்குடியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியைச் சுற்றியுள்ள 23 தீவுகளை சுற்றுலாத் தலங்களாக மாற்றும் திட்டம் விரைவுபடுத்தப்பட வேண்டும். உப்புத் தொழிலும், நூற்பாலைத் தொழிலும் மட்டுமல்லாமல் துறைமுக நகரமான தூத்துக்குடி, பாண்டியர் காலத்துச் சரித்திரப் பெருமையை மீண்டும் அடைய வேண்டும். கால்நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் தூத்துக்குடி மாவட்டம் அரை நூற்றாண்டின் சிறந்த பெருமைகளை மீட்டெடுக்கும் என்று வாழ்த்துவோமாக

நன்றி தினமணி

No comments:

Post a Comment