Thursday, September 9, 2010

உறங்க மறந்த இரவுகள்

பத்தரை மணிக்குள் பாதி
நித்திரையைக் கடந்தது ஒரு காலம்.
இப்போதெல்லாம்
உலகத்தை எழுப்பும் சேவல் தான்
என்னை தூங்க வைக்கிறது.

உன் இதழ் கடந்து வந்ததால் அலுத்துப் போன
நகைச்சுவைக்கும் சிரிப்பு வருகிறது.
என் வாழ்க்கைக் கதைகள் கூட நீ
விரும்பி கேட்பதால் வரலாறாய்த் தெரிகிறது.

இந்தியப் பொருளாதரத்தைக் கூட
இவ்வளவு நேரம் ஆராய்ந்திருக்க மாட்டார்கள்.
ஆனால் என்ன பேசப் போகிறோம் என்றே
நள்ளிரவில் தான் நாம் முடிவெடுக்கிறோம்.

ராட்டினத்தின் உச்சியை அடைந்ததும்
மின்சாரத்தை நிறுத்துவது போல,
ஒவ்வொரு முப்பது நிமிடங்களிலும்
இணைப்பைத் துண்டிக்கிறது
இங்கிதம் தெரியாத ' வோடஃபோன் '.

விரைவாக விடிந்ததால் இயற்கை சபிக்கப்படுகிறது
தொலைத்த உறக்கம் அலுவலகத்தில் துயிலப்படுகிறது.

No comments:

Post a Comment