Friday, September 17, 2010

இலவசம் என்றால் இதுவா ?

இலவசத் திட்டத்தை அரசு அறிமுகம் செய்தபின்னர், அதன் பலனை தொடர்புடையோர் அனுபவிக்க முடியாததுடன், அந்தப் பலனைப் பெறுவதற்கு முன்பு அவமானங்களைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும் என்றால், அத்தகைய திட்டத்தால் என்ன பயன் இருக்க முடியும்? அப்படியொரு திட்டமாக மாறி வருகிறது மாணவர்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம்.

பள்ளிக் குழந்தைகள் பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கிடந்தாலும், பேருந்துகள் நிற்காமல் அவர்களைக் கடந்து ஓடுவதும், மாணவர்கள் அப்பேருந்தை விரட்டிச் செல்வதும், பாதிப் பேர் ஏறியும், மீதிப் பேர் கீழே விழுவதுமான சம்பவங்கள் தமிழக நகர்ப்புறங்களிலும், ஊரகப் பகுதிகளிலும் அன்றாடக் காட்சிகளாகி வருகின்றன.

அண்மையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் ஒரு மாணவர், நிற்காது சென்ற பேருந்தை விரட்டிச் சென்று ஏற முயன்றபோது கீழே விழுந்து இறந்தார். ராமநாதபுரத்தில் ஒரு மாணவி, இலவசப் பயண அட்டை இல்லாத காரணத்தால் அவமானப்படுத்தப்பட்டு, அதனால் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த இரு சம்பவங்களையும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தானே முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டு விசாரித்தது. நீதிபதிகள் டி. முருகேசன், எஸ். நாகமுத்து ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மாணவர்களுக்குப் பிரச்னை இல்லாதபடி அரசு இத்திட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருப்பதுடன், ஓட்டுநர், நடத்துநர்களை எச்சரித்துள்ளனர். இத்தகைய சம்பவம் மீண்டும் தங்கள் கவனத்துக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

வசூல் "பேட்டா' குறைகிறது என்பதற்காக மாணவர்களை நடத்துநர்களும், ஓட்டுநர்களும் புறக்கணிப்பதாகத் தெரிகிறது என்று அடிப்படையான காரணத்தை இந்த வழக்கில் நீதிபதிகள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆம். இதுதான் கசப்பான உண்மை.

1990-ல் திமுக அரசு கொண்டு வந்த திட்டம்தான் பேருந்துகளில் மாணவர் இலவசப் பயணத் திட்டம். முதலில் இத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. மீண்டும் இதை பிளஸ் 2 மாணவர்கள் வரை நீட்டித்தார்கள். அதன் பிறகு அரசு கலைக் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இப்போது தொழிற்பயிற்சிக் கல்லூரி (ஐடிஐ) மாணவர்களுக்கும் கடந்த மே மாதம் இச்சலுகை நீட்டிக்கப்பட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தால் பள்ளி மாணவர்கள் 2.81 லட்சம் பேரும், கல்லூரி மாணவர்கள் சுமார் 20 ஆயிரம் பேரும் பயனடைகின்றனர்.

இத்திட்டம் இலவசப் பயணம் என்ற பெயரில் இருந்தாலும் இது இலவசமே அல்ல. இந்த சேவைக்காக மக்கள் பணத்திலிருந்து ஆண்டுக்கு ரூ 300 கோடியை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு அரசு அளிக்கிறது. அதாவது, மொத்தம் 3 லட்சம் மாணவர்கள் என்று வைத்துக் கொண்டாலும், ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ 10,000 மக்கள் வரிப்பணம் இந்தப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. பிறகு ஏன் இந்த அவமானம்? பிறகு ஏன் மாணவர்களைக் கண்டால் பேருந்தை நிறுத்தாமல் வேகமாகப் பறக்கிறார்கள்? இதற்குக் காரணம் நீதிமன்றம் குறிப்பிட்டதைப்போல, வசூல் "பேட்டா'தான்!

ஒவ்வொரு நாளும் ஒரு பேருந்தில் டிக்கெட் விற்பனை மூலம் வசூலாகும் பணத்தில், 2 விழுக்காடு தொகை "கலெக்ஷன்

பேட்டா' என அளிக்கப்படுகிறது. இதனை ஓட்டுநரும் நடத்துநரும் சமமாகப் பிரித்துக் கொள்கின்றனர். ஒரு நாளைக்கு ரூ 10,000 வசூல் என்றால், ஓட்டுநர், நடத்துநர் இருவருக்கும் தலா ரூ 100 கிடைக்கும். இத்தகைய இலவச பயண அட்டைகள் இவர்களது வசூல் கணக்கில் ஏறாது. இவர்களை ஏற்றினால் பேருந்து நிரம்பிவிடும். இந்த மாணவர்களால் வசூல் "பேட்டா' கிடைக்காது என்பதுடன், மற்ற பயணிகளை ஏற்ற முடியாதபடி மாணவர்களே பேருந்தில் நிரம்பி வழிவதை இவர்களால் சகித்துக்கொள்ள முடியாததன் விளைவுதான் இலவச பயண அட்டை மாணவர்களை இவ்வாறாகப் புறக்கணிக்கிறார்கள் என்கிற நீதிமன்றத்தின் கணிப்பு சரியானதுதான்.

எத்தனையோ செய்திகள், படங்கள், புகார்கள் என்றாலும் அரசுப் போக்குவரத்துக் கழகமோ, அத்துறை அமைச்சரோ இதைப் பொருள்படுத்துவதே இல்லை. ஏளனப் புன்னகையுடன் புறந்தள்ளி விடுகிறார்கள். அவமானப்படுவதும் அவதிப்படுவதும் அவர்கள் வீட்டுக் குழந்தைகள் அல்லவே!

மாணவர்கள் அவமதிக்கப்படுவதை உண்மையிலேயே தமிழக அரசு விரும்பவில்லை என்றால், தற்போதைய நடைமுறையை மாற்றியாக வேண்டும். ஒட்டுமொத்தமாகப் பணத்தை அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு அளிப்பதை நிறுத்த வேண்டும். மாணவர்களுக்கு 180 வேலை நாள்களுக்காக 360 "டோக்கன்'களை அளித்து, அந்த "டோக்கன்'களை நடத்துநர் தனது வசூல் கணக்கில் வரவு வைத்துக்கொள்ளும் புதிய நடைமுறையை உருவாக்கினால் மட்டுமே, நடத்துநர்களும் ஓட்டுநர்களும் இந்த மாணவர்களை மனித உயிர்களாக, பயணிகளாக மதிப்பார்கள். இல்லாவிட்டால், மாணவர்கள் ஆண்டுதோறும் ஆங்காங்கே இறப்பது நடக்கவே செய்யும்.

ஆசிரியர்களும் சமூக ஆர்வலர்களும் நீதிமன்றம் தந்துள்ள இந்த நம்பிக்கையான தீர்ப்பைப் பயன்படுத்தும் வகையில், மாணவர்களை ஏற்றிக்கொள்ள மறுத்து விலகி ஓடும் பேருந்துகள் பற்றிய தகவல்களுடன் நீதிமன்ற அவமதிப்பு என்பதாக வழக்குத் தொடுக்கலாம். நீதிமன்றத்தின் படியேறுவோர் எண்ணிக்கை அதிகமாகும்போதாகிலும், இவர்கள் கீழ்ப்படிவார்களா என்பதைப் பார்க்கலாம்.

தினமணி

No comments:

Post a Comment